இந்தியா

கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ்: பாதிப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

கேரளாவில் மேலும் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அம்மாநில சுகாதார அமைசர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது மூதாட்டி ஒருவரின் ரத்த மாதிரிகள் கோவையில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதில் அவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. ஆழப்புழாவிலிருந்து ஐந்து பேரின் ரத்த மாதிரிகள் சந்தேகத்தின் பேரில் புனேவில் தேசிய வைராலஜி மையத்துக்கு அனுப்பிவைக்கப்படது. ஆனால், ஐந்து பேருக்குமே தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஒரே நாளில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து மாநிலத்திலுள்ள 4 மருத்துவக் கல்லூரிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2100 மருத்துவப் பரிசோதனை உபகரணங்களை மாநில அரசு ஏற்பாடு செய்தது.

திருவனந்தபுரம், திருசூர், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளிலும் ஆழப்புழாவிலும் சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மாநிலத்தில் காய்ச்சல், உடல் வலி மற்றும் உடலில் தடிப்புகளுடன் வருவோரை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அரசு அறிவித்துள்ளது.

டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்களை பரப்பும் கொசுக்களாலேயே ஜிகா வைரசும் ஏற்படுகிறது. இது ஆபத்தானது அல்ல. இதற்கு மருத்துவமனை சிகிச்சையும் தேவைப்படாது. ஆனால், கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் கருவுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

திருவனந்தபுரத்தில் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 24 வயது பெண்ணுக்குதான் முதன்முதலில் ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், அறிகுறிகள் டெங்குவைப் போலவே இருக்கும். குறிப்பாக, உடற்சோர்வு, தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, தோல் சினைவு, கண்கள் சிவந்து போதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும்.

ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும் பாதிப்பு ஏற்பட்ட 2 முதல் 7 வது நாளில் அறிகுறிகள் காணப்படும். இதுவரை ஜிகா வைரஸுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அதிகமான ஓய்வு, திரவ உணவுகளை சாப்பிடுவது, உடல்வலி, காய்ச்சலுக்கான மருந்துகளை வழங்குவதுதான் இதற்கு மருத்துவம் என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. கொசுக்கடிகளை தவிர்ப்பதன் மூலமே ஜிகா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்க முடியும்.

கேரளாவில் இதுவரை 19 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT