நாடுமுழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதுதொடர்பாக தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையமும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பரவலமாக மழை பெய்கிறது. அதுபோலவே வட மாநிலங்களிலும் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்கிறது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மின்னல் மற்றும் பலத்த மழையில் சிக்கி 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுபோலவே இமாச்ச பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று தேசிய வானிலை முன்னெச்சரிக்கை மையம் கணித்துள்ளது. ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சமவெளி மற்றும் நடு மலைகளில் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு வானிலை எச்சரிக்கையும், ஜூலை 14 மற்றும் 15 ஆம் தேதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
அங்கு நேற்று மேகவெடிப்பு ஏற்பட்ட பலத்த மழை கொட்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள், விடுதிகள் சேதமடைந்தன. கடைகள் சேதமடைந்தன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் ஜாக்ரி தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழை குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, நிலைமை கவனமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாநில அரசுடன் இணைந்து அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். சாத்தியமுள்ள அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களின் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன்,” என்று தமது பதிவிட்டுள்ளார்.