இந்தியா

மேகதாது அணை; உச்ச நீதிமன்ற தடை இல்லை- கர்நாடகாவுக்கு உரிமை உண்டு: பசவராஜ் பொம்மை

செய்திப்பிரிவு

மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை, எனவே அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு முழு உரிமையுள்ளது என கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்துத் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கி தமிழக விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரினார்.

மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியபோது, இந்த அணை அமைந்திட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கர்நாடக முதல்வருக்கு பதில் கடிதம் எழுதினார்.

இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் நலனைக் காப்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒருமித்த எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணை பிரச்சினை குறித்து கலந்தாலோசிக்க தமிழகத்திலுள்ள சட்டப்பேரவை அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சிக்குக் கண்டனம், தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிப்பது உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:
மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை.

மக்களின் குடிநீர் ஆதாரத்துக்காக இந்த நடவடிக்கையை கர்நாடகா மேற்கொண்டுள்ளது. கர்நாடகாவுக்கு இதற்கு முழு உரிமையுண்டு. தமிழகத்தின் வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT