பாஜகவுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், அரசியல் விவகாரங்களைக் கையாளவும் இணைப் பொதுச் செயலாளர் அருண் குமார் ஒருங்கிணைப்பாளராக ஆர்எஸ்எஸ் அமைப்பு நியமித்துள்ளது
அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த முக்கிய நிர்வாக மாற்றத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு எடுத்துள்ளது. இதற்கு முன் அரசியல் ஒருங்கிணைப்பாளராக இருந்த கிருஷ்ணகோபால் மாற்றப்பட்டு அருண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள சித்திரகூட் நகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழு நேர நிர்வாகிகள் கூட்டம் நடந்து வருகிறது, இந்தக் கூட்டத்தில் இந்த நிர்வாக மாற்றம் குறி்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் பிரசார் பிராமுக் சுனில் அம்பேத் கூறுகையி்ல் “ இணைப்பொதுச் செயலாளர் அருண் குமார், சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அவருக்கு தற்போது, பாஜகவுடன் ஒருங்கிணைப்பாளராகவும், அரசியல்விவகாரங்கள் ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமான நிர்வாக மாற்றம்தான். இந்தப் பதவியில் அருண் குமார் உடனடியாகப் பதவி ஏற்க உள்ளார்” எனத் தெரிவித்தார்.
கடந்த 2014-15-ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு முதன் முதலில் பதவி ஏற்கும் போது, கிருஷ்ண கோபால் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப்பிரேதசத்தில் நடந்துவரும் ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் முடிவில் பல்வேறு நிர்வாக மாற்றங்கள் தொடர்பான முடிவு எடுக்கப்படும். குறிப்பாக மே.வங்கம், ராஜஸ்தான் மாநிலங்களில் நிர்வாக ரீதியான மாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடுமுழுவதும் ஆர்எஸ்எஸ் சார்பில் 39,454 தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கரோனா 3-வது அலையை எதிர்கொள்வது குறித்தும், அந்தநேரத்தில் மக்களுக்கு எவ்வாறு உதவுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது.