மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சொந்த மாநிலமான குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அகமதாபாத்தில் ரூ.244 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
எனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு தலைவர்களை பார்த்துள்ளேன். சில தலைவர்கள் ரிப்பன் வெட்டும் திறப்பு விழாக்களில் மட்டுமே பங்கேற்பார்கள். சில தலைவர்கள் தங்களது பதவிக் காலத்தில், ஆட்சிக் காலத்தில் மட்டும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் 14 ஆண்டுகள் முதல்வராகப் பதவி வகித்த போது வளர்ச்சிக்கு வித்திட்டார். இதன்காரணமாக மாநிலம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்தது. குஜராத்தை விட்டு சென்ற பிறகும், அவர் காட்டிய வழியில் குஜராத் முன்னேற்ற பாதையில் செல்கிறது.
கரோனா 2-வது அலையின்போது ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி விரைந்து செயல்பட்டு நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க நடவடிக்கை எடுத்தார். கரோனாவில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு வரும் நவம்பர் மாதம் வரை மத்திய அரசு சார்பில் ரேஷனில் கூடுதல் உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைசிறந்த தலைவர். அவரை போன்ற தலைவர்களைப் பார்ப்பது அரிது.
இவ்வாறு அமைச்சர் அமித் ஷா கூறினார்.