இந்தியா

உ.பி.யில் அல் - கொய்தா தீவிரவாதிகள் 2 பேர் கைது: லக்னோவில் தாக்குதல் சதி முறியடிப்பு

செய்திப்பிரிவு

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள ககோரி பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக மாநில தீவிரவாத தடுப்புப் படையிடம் (ஏடிஎஸ்) உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, ககோரி பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏடிஎஸ் படையினர் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஷாகித் என்பவரின் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த 2 பேரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தின.

அவர்களை பின்தொடர்ந்து உளவு பார்த்ததில், அவர்கள் அல் - கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இந்நிலையில், நேற்று காலை அவர்களின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த ஏடிஎஸ் படை அதிகாரிகள், 2 தீவிரவாதிகளையும் கைது செய்தனர். அங்கிருந்து ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏடிஎஸ் அதிகாரிகள் நடத்தியவிசாரணையில், அவர்கள் அல் - கொய்தா அமைப்புக்காக இந்தியாவில் இயங்கி வரும்‘அன்சார் கஸ்வாட் உல் இந்த்' இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும், லக்னோவில் மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்காக சதித்திட்டம் தீட்டியதும் கண்டறியப்பட்டது. அந்த தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக மாநில ஏடிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்தார்.

இதனிடையே, கான்பூரில் இவர்களின் கூட்டாளிகள் சிலர் மறைந்திருப்பதாக தெரிய வந் துள்ளது. அவர்களை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT