பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல் தீவிரம்: இந்திய தூதரக அதிகாரிகள் பத்திரமாக டெல்லி திரும்பினர்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருவதால், காந்தகாரில் உள்ள துணை தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் இந்திய அதிகாரிகள் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்த போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்க படைகளின் கீழ் போரிட்டன.

தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்த போரில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலம் முதலே ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜோ பைடன் நிர்வாகமும் இம்முடிவைத் தொடர்கிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து நாட்டைப் பாதுகாக்கும் முழுப் பொறுப்பு தற்போது ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் வந்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில் அங்கு தலிபான்களின் கை ஓங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சியில் தலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். படாக்ஸ்கான் மற்றும் கந்தகார் மாகாணங்களில் உள்ள நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

தாக்குதல்களை தடுக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் தலிபான்களிடம் சரணடைந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

காந்தகார் அருகே தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருவதால், அந்நகரில் உள்ள துணை தூதரக அலுவலகம் காலி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் இந்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 50 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்திய விமானப்படை விமானம் மூலம் பாதுகாப்பாக அவர்கள் அனைவரும் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இதனை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

‘‘காந்தகாரில் உள்ள துணைத் தூதரகம் மூடப்படவில்லை. காந்தகார் அருகே, தாக்குதல் நடத்தி வருவதால், ஊழியர்கள் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். இது, பாதுகாப்பு நிலைமை மேம்படும் வரை எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை’’ என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT