டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக நிலவரம் மற்றும் தேவைகள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற்று தற்போது திமுகவின் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. அரசு சார்பில்பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை மற்றும் நதிநீர் பிரச்சினை, ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலினும் வலியுறுத்தினார்.
இதற்கிடையே புதிதாக அமைக்கப்பட்ட சட்டப்பேரவையின் முதல்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று உரையாற்றினார். இதில், தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தும் அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இந்தச் சூழலில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். நேற்று காலைபாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.அதன்பின் பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்தித்து பேசினார். முன்னதாக, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் முடிவெடுப்பார் என்று ஆளுநர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த சந்திப்பின்போது, குடியரசுத் தலைவரிடம் புதிய அரசின் நடவடிக்கைகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, நேற்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடியை ஆளுநர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் கரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு நிலைமை, புதிய அரசின் செயல்பாடுகள், தமிழகத்தில் உள்ள அரசியல் நிலைமை, 7 பேர் விடுதலைவிவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள், நீட்தேர்வு விவகாரம், மேகேதாட்டு அணை உள்ளிட்ட மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
மேலும், தமிழக ஆளுநராக கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர்மாதம் பதவியேற்றார். வரும் அக்டோபர் மாதத்தில் அவர் பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதற்கிடையே அவர் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி மறுக்கப்பட்டது. சமீபத்தில் பல மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழக ஆளுநரும் விரைவில் மாற்றப்படலாம் எனகருதப்படுகிறது. இது தொடர்பாகவும் குடியரசுத் தலைவர், பிரதமரை ஆளுநர் சந்தித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவை ஆளுநர் சந்தித்து, தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.
பின்னர், நேற்று மாலை, மத்தியஇணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகனை சந்தித்தஆளுநர், அவருடன் இரவு விருந்தில் பங்கேற்றார். தொடர்ந்து, இன்றுஅவர் சென்னை திரும்புகிறார்.
தமிழகத்துக்கு புதிய ஆளுநர்?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இதனால்,12 மூத்த அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, புதியவர்களுக்கு வழிவிட்டனர். இவர்களில், சட்டத் துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத், தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.