இந்தியா

ஒடிசாவில் 100 நாள் வேலைக்கான ஊதியம் ரூ.207-ல் இருந்து ரூ.257 ஆக உயர்வு

செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1,690 கோடி நிதி ஊக்குவிப்பு திட்டத்தை கடந்த மாதம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார்.

அந்த வகையில் தற்போது தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 3 மாதங்களாகப் பணியாற்றிய 32 லட்சம் பேருக்கு தின ஊதியத்தை ரூ.207-லிருந்து 50 உயர்த்தப்பட்டு ரூ.257 ஆக வழங்குவதாக நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதற்கு ரூ.532 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஏழைகள் நலனுக்காகப் பணியாற்றுவதில்தான் திருப்தியாக உணர்கிறேன். இந்த நிதி அவர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்’ என்றார்.

ஒடிசாவில் நடப்பு நிதி ஆண்டில் ஜூலை 1ம் தேதி வரை 32 லட்சம் பணியாளர்கள் மொத்தமாக 7.59 கோடி நாட்கள் வேலை செய்துள்ளதாக பஞ்சாயத்து அமைப்புகள் கூறியுள்ளன. இது 2020-21 நிதி ஆண்டில் இதேகாலத்தில் 5.03 கோடி நாட்களாக இருந்தது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமானது உலகிலேயே மிகப்பெரிய வேலைவாய்ப்பு திட்டமாகும். இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் இத்திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. இதில் 18 வயது நிரம்பியவர்கள் தாமாக முன்வந்து பணி செய்யலாம்.

SCROLL FOR NEXT