இந்தியா

மாநிலங்கள் வசம் 1.73 கோடி கோவிட் தடுப்பூசிகள்: மத்திய அரசு தகவல்

செய்திப்பிரிவு

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தனியார் மருத்துவமனைகளின் வசம் 1.73 கோடி கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 37 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 48,04,423 முகாம்களில் 37,21,96,268 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,55,802 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 13-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

நம் நாட்டில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,55,033 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.48 சதவீதமாகும்.

இதுவரை மொத்தம் 2,99,33,538 பேர் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் குணமடைந்தனர். இதன்படி குணமடைந்தவர்களின் வீதம் 97.20 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19,55,225 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,90,41,970 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி வீதம் 2.34 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.19 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 19 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 33 நாட்களாக 5 சதவீதத்துக்கும் குறைவாகவும் உள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தனியார் மருத்துவமனைகளின் வசம் 1.73 கோடி கோவிட் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 38.54 கோடிக்கும் அதிகமான (38,54,01,150) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது.

இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 36,80,68,124 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 1.73 கோடி (1,73,33,026) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT