கோப்புப்படம் 
இந்தியா

தயாராக இருங்கள்; 40 ஆயிரம் இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு: டிசிஎஸ் நிறுவனம் அறிவிப்பு

பிடிஐ

நடப்பு நிதியாண்டில் (2021-22) படித்து முடித்த 40 ஆயிரம் இளம் பட்டதாரிகளைப் பணிக்கு எடுக்கப்போவதாக மிகப்பெரிய மின்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனத்தின் (டிசிஎஸ்) முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனியார் மென்பொருள் நிறுவனத்திலேயே 5 லட்சம் ஊழியர்களைக் கொண்டு செயல்படும் டிசிஎஸ் நிறுவனம், 2020-ம் ஆண்டு 40 ஆயிரம் இளைஞர்களைப் பணிக்கு எடுத்தது. இந்த ஆண்டும் அதே அளவில் ஊழியர்களைப் பணிக்கு எடுப்பதாக அந்த நிறுவனத்தின் சர்வதேச மனிதவளத்துறை தலைவர் மிலந்த் லக்காட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த டிசிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச மனிதவளத்துறையின் தலைவர் மிலந்த் லக்காட் அளித்த பேட்டியில்கூறியதாவது:

''கரோனா வைரஸ் பரவலால் பணிக்குத் தேவையான இளைஞர்களைத் தேர்வு செய்வதில் எந்தவிதமான சிரமமும் எங்களுக்கு ஏற்படவில்லை. 3.60 லட்சம் இளைஞர்கள் வேலைக்கான நுழைவுத்தேர்வில் ஆன்லைன் மூலம் கடந்த ஆண்டு பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு 40 ஆயிரம் இளைஞர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்ந்தெடுத்தோம். இந்த ஆண்டும் அதே அளவுக்கு 40 ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளோம். அமெரிக்க கல்லூரிகளில் இருந்து 2 ஆயிரம் இளைஞர்களையும் கடந்த ஆண்டு தேர்ந்தெடுத்தோம்.

சர்வதேச அளவில் வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டால், கேம்பஸ் மூலம் ஏராளமான இளைஞர்களைத் தேர்வு செய்வோம். சர்வதேச அளவிலான ஒரு ஒப்பந்தம் பேசப்படும்போதே மூன்று மாதங்களுக்கு முன்பே பணியாட்களைத் தேர்வு செய்யத் தொடங்கிவிடுவோம்”.

இவ்வாறு மிலந்த் லக்காட் தெரிவித்துள்ளார்.

டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கணபதி சுப்ரமணியம் கூறுகையில், “இந்தியாவில் மனித வளத்துக்கோ, திறமையான இளைஞர்களுக்கோ பஞ்சமில்லை. இந்திய இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, மனநிறைவுடன் பணியாற்றுவதற்கு இணையில்லை” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT