மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக வெளியிட்டிருந்த அறிவிக்கையை எதிர்த்து பொது நல வழக்கை டெல்லி அரசு தொடர்ந்திருந்தது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு பொதுநல வழக்கு போட்டிருப்பது வியப்பாக உள்ளது. இதை ஏற்க முடியாது என்று கூறி நிராகரித்தனர். இதைத் தொடர்ந்து மனுவைத் திரும்பப் பெறுவதாக மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ் நீதிபதிகளிடம் கூறினார்.
பொதுவாக பொது நல வழக்கு என்பது தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்படும். பொதுமக்கள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்காட முடியாத மக்கள் சார்பில் இத்தகைய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழியேற்படுத்தப்படும். மத்திய அரசு முரணாக செயல்படுமேயானால் அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட மாநில அரசுதான் (டெல்லி) நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக மத்தியஅரசுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுத்திருப்பது விநோதமாக உள்ளது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லி அரசு தாக்கல் செய்த மனுவில் பஞ்சாப், ஹரியாணா, உ.பி.யில் உள்ள 10 அனல் மின் நிலையங்களில் எப்ஜிடி எனப்படும் அதிக மாசு வெளியிடாத நுட்பம் பின்பற்றப்படவில்லை. இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.