38.18 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள் இதுவரை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுகின்றன. அந்த வகையில் தொற்றிலிருந்து காத்துக் கொள்ளவும், கரோனாவின் அடுத்தடுத்த அலைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் உலக நாடுகள் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
உலக அளவில அதிகமாக தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்திடத்தில் உள்ளது. நாள்தோறும் தடுப்பூசி கையிருப்பு, விநியோகம் குறித்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை 38.18 கோடிக்கும் அதிகமான (38,18,97,610) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது. மேலும், 23,80,080 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 36,48,77,756 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளது.
1.70 கோடி (1,70,19,854) கோவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.