மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹைதி அதிபர் ஜொவினெல் மொய்சே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஹைதி அதிபர் ஜொவினெல் மொய்சே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரிபீயன் தீவில் அமைந்துள்ளது ஹைதி நாடு. ஹைதி அதிபர் ஜொவினெல் மொய்சே மீது எழுந்த ஊழல் புகாரை முறையாக விசாரிக்க வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
மேலும், ஹைதி நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து மக்கள் தலைநகர் போர்ட்-அயு-பிரின்ஸில் திரண்டு அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமும் வன்முறையில் முடிந்தது. இதன் காரணமாக ஜொவினெல் அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்தநிலையில் அதிபர் ஜொவினெல் மொய்சே துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த ஜொவினெல் மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
ஹைதி அதிபர் கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹைதியின் தலைமை போலீஸ் அதிகாரி லியான் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஹைதி அதிபர் ஜொவினெல் மொய்சே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘ஹைதி அதிபர் ஜொவினெல் மொய்சே படுகொலையையும், ஹைதியின் முதல் பெண்மணி மார்ட்டின் மொய்சே மீதான தாக்குதலையும் அறிந்து வருத்தமடைந்தேன். அதிபர் மொய்சேயின் குடும்பத்திற்கும், ஹைதி மக்களுக்கும் எனது இரங்கல்கள்" என்று கூறியுள்ளார்.