இந்தியா

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி, தேவை, விநியோகம்: பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி, தேவை, விநியோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-வது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

கரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், தடுப்பூசிசெலுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3-வது அலை விரைவாக வருவது சாத்தியம் என்று ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கையில் கரோனா 3-வது அலை ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் தாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் 3-வது அலை குறித்து நடத்திய ஆய்வில் கரோனா 2-வது அலையில் பாதிக்கப்பட்ட மக்களின் அளவில் 1.7 மடங்கு 3-வது அலையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் கரோனா 3-வது அலை தொடர்பாக பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன.

இதனால் இந்தியாவில் கரோனா 3-வது அலையில் இருந்து மக்களை காக்கும் விதமாக மத்திய அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏப்ரல்-மே மாதங்களில் இரண்டாவது கரோனா அலையின் உச்சத்தில் இருந்தபோது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் 3-வது அலை ஏற்பட்டால் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி, தேவை, விநியோகம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலங்கள் வாரியாக தேவை, விநியோகம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT