ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்ற அஸ்வினி வைஷ்ணவ், தான் பதவி ஏற்ற சில மணி நேரங்களில், தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இரு ஷிப்ட்களில் பணிக்கு வருமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
முதல் ஷிப்ட் காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரையிலும், 2-வது ஷிப்ட் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 12 மணிவரை பணியாற்றவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார்.
ரயில்வே அமைச்சராகவும், தகவல் தொடர்பு மற்றும் மின்னணு தகவல்தொடர்புத்துறை அமைச்சராகவும் அஸ்வினி வைஷ்ணவ் பொறுப்பேற்றார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான வைஷ்ணவ், 1974-ம் ஆண்டு பேட்சைச் சேர்ந்தவர்.
ரயில்வே அமைச்சகத்தின் துணைப் பொதுமேலாளரின் மக்கள் தொடர்பு அதிகாரி டிஜே நரைன் கூறுகையில், “ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பிறப்பித்த உத்தரவில், ரயில்வே அமைச்சகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் இரு ஷிப்ட்களில் பணிக்கு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். முதல் ஷிப்ட் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், 2-வது ஷிப்ட் மாலை 3 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் இருக்கும். இது உடனடியாக அமலுக்கு வருகிறது” எனத் தெரிவித்தார்.
ரயில்வே அமைச்சராகப் பதவி ஏற்ற அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில் கூறுகையில், “ரயில்வே துறையை மக்களுக்கு ஏற்ற மாதிரி, அதாவது சாமானிய மக்கள், விவசாயிகள், ஏழைகள் அனைவரும் பயன்பெறுமாறு மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு வைத்துள்ளார். அவரின் நோக்கத்தின்படி செயல்படுவேன்” எனத் தெரிவித்தார்.
இதற்கு முன் ரயில்வே அமைச்சகப் பொறுப்பு பியூஷ் கோயலுக்கு வழங்கப்பட்டு இருந்தது. அவர் ரயில்வே அமைச்சகத்தோடு, கூடுதலாக நுகர்வோர் துறை, பொது விநியோகம், ஜவுளித் துறையைக் கவனித்துவந்தார்.
ரவிசங்கர் பிரசாத் கவனித்துவந்த தகவல் தொடர்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையும் அஸ்வினி வைஷ்ணவிடம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ முடித்தவரும், கான்பூர் ஐஐடியில் படித்தவருமான அஸ்வினி அமைச்சராக வந்துள்ளது இந்தத் துறைக்கு முதல் முறையாகும்.