‘தண்டனை குறைப்பை’ எதிர்த்து பொதுநல வழக்கு
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் (56), புனேவில் உள்ள எரவாடா மத்திய சிறையில் இருந்து இன்று விடுதலையாகிறார்.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உயிரிழந் தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வீட்டில் சோதனையிட்டதில் ஏ.கே. 56 ரக துப்பாக்கியும், ஒரு சிறிய கைத் துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இவ்வழக்கில் சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ல் 5 ஆண்டுகளாக குறைத்தது.
இதையடுத்து எஞ்சிய தண்டனை காலத்தை கழிப்பதற் காக எரவாடா சிறையில் 2013, மே மாதம் சஞ்சய் தத் அடைக் கப்பட்டார். தண்டனை காலத்தில் அவர் அடிக்கடி பரோலில் செல்ல அனுமதிக்கப்பட்டது மற்றும் பிற சலுகைகள் வழங்கியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நன்னடத்தை அடிப்படையில் சஞ்சய் தத்தை, தண்டனை காலத்துக்கு 103 நாட் களுக்கு முன் விடுதலை செய்ய மகாராஷ்டிர உள்துறை அமைச் சகம் முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து சஞ்சய் தத் இன்று விடுதலை ஆகிறார்.
அவரது விடுதலையை எரவாடா சிறை அதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர். இதுகுறித்து எரவாடா சிறை கண்காணிப்பாளர் யூ.டி.பவார் கூறும்போது, “சஞ்சய் தத் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு விடுதலை செய்யப் படுவார். தண்டனை காலத்தை பூர்த்தி செய்த கைதிகளை விடுதலை செய்யும் வழக்கமான நடைமுறைகளின்படி அவர் விடுவிக்கப்பட உள்ளார்” என்றார்.
விடுதலையை எதிர்த்து வழக்கு
இதனிடையே சஞ்சய் தத்துக்கு அளிக்கப்பட்ட ‘தண்டனை குறைப்பை’ எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரதீப் பாலேகர் என்ற சமூக செயற்பாட்டாளர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், “சஞ்சய் தத்துக்கு தண்டனை காலத்தை குறைக்கும் மகாராஷ்டிர அரசின் முடிவை ரத்து செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 5 ஆண்டு முழுவதும் அவர் தண்டனை அனுபவிக்கும் வகையில் அவர் சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட வேண்டும்” என்று கோரியுள்ளார்.
நன்னடத்தை காரணமாக சஞ்சய் தத்துக்கு தண்டனை குறைப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மனுதாரரின் வழக்கறிஞர் நிதின் சத்புதே கூறும் போது, “இந்த தண்டனை குறைப்பு தவறானது மற்றும் சட்ட விரோத மானது. தண்டனை குறைப்புக்கு நன்னடத்தை என்று எதைச் சொல் கிறார்கள். சிறிய குற்றங்களுக்காக சிறையில் உள்ள பலர் தண்டனை குறைப்புக்கு விண்ணப்பித்துள்ள னர். இவர்களின் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வில்லை. இதனை நீதிமன்றத்தில் நான் எடுத்துரைப்பேன்” என்றார்.
இந்த மனு இன்று விசா ரணைக்கு வரும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.