"வலிமையான இந்தியாவை உருவாக்க நாம் தொடர்ந்து உழைப்போம்" என புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக ஆட்சிப்பொறுப்பேற்ற போது அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை, முதன்முறையாக நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும், வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்கவும் நாம் தொடர்ந்து அயராது உழைப்போம் என தனது பதிவில் மோடி கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விடுத்துள்ள அறிக்கையில், “அனைத்து தரப்பு மக்களிடமும் அரசின் நலத்திட்ட பலன்களை புதிய அமைச்சரவை வெற்றிகரமாக கொண்டு சேர்க்கும் என முழுமையாக நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “இந்தியாவின் வலிமையை மேம்படுத்தவும், நாட்டின்வளர்ச்சிக்காக அரசு பூண்டிருக்கும் லட்சியங்களை நிறைவேற்றவும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் இணைந்து பாடுபடும்" என்றார்.