தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், மேகேதாட்டுவில் விரைவில் புதிய அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் அண்மையில் வலியுறுத்தினார். அதனை ஏற்ற கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவுக்கு அணை கட்ட அனுமதி வழங்க மாட்டோம் என உறுதி அளித்ததாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்றுசெய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக அரசின் நீண்டகால திட்டமான மேகேதாட்டு கூட்டுக் குடிநீர் மற்றும் மின் உற்பத்தி திட்டத்தை தமிழக அரசின் ஒத்துழைப்புடன் செயல்படுத்த முதல்வர் எடியூரப்பா விரும்பினார். ஆனால், தமிழக அரசோ கர்நாடகாவின் நல்லிணக்க கோரிக்கையை ஏற்கவில்லை. காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பின்படி, கர்நாடகாவுக்கு அனுமதிக்கப்பட்ட நீர் பங்கீட்டை கொண்டேமேகேதாட்டு திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளோம். எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீரை பயன்படுத்த மாட்டோம்.
தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மேகேதாட்டுவில் விரைவில் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக இந்த வாரஇறுதிக்குள் முதல்வர் எடியூரப்பாசட்டம், நீர்வளத்துறை நிபுணர்களுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்த இருக்கிறார். பசுமை தீர்ப்பாயமும், மத்திய அரசும் இந்த திட்டத்துக்கு எவ்வித தடையும் விதிக்காததால், அணை கட்டும் பணிகள் சுமூகமாக நடைபெறும். இவ்வாறு அஷ்வத் நாராயண் தெரிவித்தார்.