இந்தியா

சாலை விபத்தில் உடல் 2 துண்டானபோதும் உறுப்பு தானம் செய்ய கெஞ்சிய இளைஞர்

இரா.வினோத்

பெங்களூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உடல் 2 துண்டுகளான நிலையில், தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உதவுங்கள் என சுற்றியிருந்தவர்களிடம் கோரியுள்ளார் ஒரு இளைஞர். ஆபத்தான நிலையிலும் சமயோசிதமாக செயல்பட்ட இளைஞரின் கொடையுள்ளம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாட‌கா மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள குப்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் (26). பெங்களூருவில் உள்ள‌ தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த சனிக்கிழமை உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றார். நேற்று முன்தினம் குப்பியில் இருந்து பெங்களூருக்கு ஹரிஷ் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

நெலமங்களாவை அடுத்துள்ள திப்பகொண்டனஹள்ளி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு லாரி அவரை முந்திச் செல்ல முயன்றது. அப்போது அந்த லாரி மோதிய‌தில் ஹரிஷ் அதன் சக்கரத்தில் சிக்கினார். லாரி ஏறியதில் அவரது உடல் இரண்டு துண்டுகளானது.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி உயிருக்குப் போராடிய ஹரீஷை காப்பாற்ற அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது ஹரீஷ் கூறும்போது, “நான் பிழைப்பது மிகவும் கடினம். எனது உடல் உறுப்புகளை எடுத்து தேவையானவர்களுக்கு தானம் செய்யுங்கள்” என கைகளை கூப்பி, கதறி அழுதார். இதைக் கண்டவர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போனதாக சம்பவ இடத்தில் இருந்த போலீஸார் தெரிவித்தனர்.

இத‌னிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸில் ஹரீஷ் ஏற்றப்பட்டு, அடுத்த 8 நிமிடங்களில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஹரீஷ் உயிரிழந்தார்.

சாலை விபத்தில் உடல் இரு துண்டுகளாக ஆன நிலையிலும் அந்த இளைஞர், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி பேசியது மனதை நெகிழச் செய்தது என மருத்துவர்களும் போலீஸாரும் தெரிவித்துள்ளனர்.

கடைசி ஆசை

ஹரீஷின் கடைசி ஆசையின்படி அவரது கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் எடுக்கப்பட்டன. ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவரது கண்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. அதேநேரம் இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் விபத்தில் சேதமடைந்ததால் அவற்றை பிறருக்கு பொருத்த முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுந‌ர் வரதராஜை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற‌னர்.

SCROLL FOR NEXT