இந்தியா

‘ஜியோபோன் நெக்ஸ்ட்’ தயாரிப்பு: பிளெக்ஸ், கார்பன் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தகட்டமாக ஜியோபோன் நெக்ஸ்ட் எனும் ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 10-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை ரூ.5ஆயிரத்துக்கும் குறைவான விலையில் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் நடந்த இயக்குநர் குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார். இந்த ஸ்மார்ட்போன்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது தொடர்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த பிளெக்ஸ் நிறுவனம், கார்பன் போன்களை தயாரிக்கும் இந்திய நிறுவனமான யுடிஎல் நியோலிங்க்ஸ் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. .

இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஜியோ வாடிக்கையாளர்கள் 50 கோடி பேரை இது சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொழிபெயர்ப்பு வசதி, சிறந்தகேமரா உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்டதாக இது இருக்கும். யுடிஎல் நிறுவனத்துக்கு நொய்டா, திருப்பதி மற்றும் ஹரியாணா மாநிலம் பாவல்ஆகிய இடங்களில் ஆலைகள் உள்ளன. பிளெக்ஸ் நிறுவனத்துக்கு தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, வாலாஜாபாத் ஆகிய இடங்களிலும் ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியிலும் ஆலைகள் உள்ளன.

SCROLL FOR NEXT