மேகேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடக உள்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை நேற்று பெங்களூருவில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
மேகேதாட்டு திட்டத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருக்கிறது. எனவே எதிர்க்கட்சிகளும் விவசாய அமைப்புகளும் கர்நாடக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான செயல் திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு உயர் அதிகாரிகளுக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
இந்த வார இறுதிக்குள் நீர்ப்பாசனம், சட்டம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். இதுதவிர தொழில்நுட்ப நிபுணர் குழுவினர், காவிரி நீர்ப்பாசன கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடனும் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மேகேதாட்டு அணை திட்டம் கர்நாடகாவுக்கு மிகவும் முக்கியமான திட்டம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்துமாறு அமைச்சர்களுக்கும் எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளார்.
மேகேதாட்டு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் தொடுத்துள்ள வழக்கை எதிர்கொள்வது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திலும் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் பெறும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். விரைவில் மத்திய அரசும் எங்களுக்கு சாதகமான பதிலை அளிக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.