புதியதாக மாற்றம் செய்யப்பட் டுள்ள மத்திய அமைச்சரவையில் கர்நாடகாவை சேர்ந்த 4 எம்பிக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கர்நாடகாவை சேர்ந்த சதானந்த கவுடா ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சராகவும், பிரஹலாத் ஜோஷி நாடாளுமன்ற விவகாரத் துறை பதவி அமைச்சராகவும் பதவி வகித்தனர். நேற்று அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் சதானந்த கவுடா அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் சிக்கமகளூரு எம்பி ஷோபா கரந்தலாஜே, சித்ரதுர்கா எம்பி நாராயண சாமி, பீதர் எம்பி பகவந்த் கூபா, ராஜ்யசபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் ஆகிய நால்வர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். கர்நாடகாவை சேர்ந்த 4 எம்பிக்கள் மத்திய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
அதே வேளையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, '' 2023ம் ஆண்டு நடக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே மோடி கர்நாடகாவுக்கு முக்கியத்துவம் அளிப்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். அதன்வெளிப்பாடாகவே கர்நாடகாவை சேர்ந்த நால்வருக்கு அமைச்சரவையில் இடமளித்துள்ளார்''என விமர்சித்துள்ளார்.