இந்தியா

மத்திய அமைச்சரவை மாலை 6 மணிக்கு விரிவாக்கம்: 43 பேர் பதவியேற்கின்றனர்

செய்திப்பிரிவு

மத்திய அமைச்சரவை இன்று மாலை 6 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் புதிய அமைச்சர்களாக மொத்தம் 43 பேர் பதவியேற்கவுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பாஜக நிர்வாகிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் பதவியேற்க ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

மத்திய அமைச்சரவையில் தற்போது 28 காலி இடங்கள் இருக்கிறது. தற்போது அமைச்சரவையில் பிரதமர் மோடியைத் தவிர்த்து 21 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் உள்ளனர்.

மத்திய அமைச்சர்களாக இருக்கும் சிலர் தங்கள் உடல்நிலையை காரணமாக பதவி விலக விரும்புவதாக அவர்கள் ஏற்கெனவே தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பாக அவர்கள் பதவி விலகியுள்ளனர்.

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் மற்றும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனும் ராஜினாமா செய்துள்ளார்.

அவர்கள் நிர்வகித்து வந்த துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதுமட்டுமல்ல சில மத்திய அமைச்சர்கள் மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

மொத்தம் 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். இவர்களில் பலர் புதுமுகங்களாகும். இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது. முன்னாள் முதல்வர்கள் 4 பேர், முன்னாள் மாநில அமைச்சர்கள் 18 பேர், வழக்கறிஞர்கள் 13 பேர், மருத்துவர்கள் 6 பேர், இன்ஜினியர்கள் 5 பேர், முன்னாள் அரசு அதிகாரிகள் 7 பேர் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அமைச்சர்களில் பாஜக எம்.பி.க்களான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா, வருண் காந்தி, ராம்சங்கர் கத்திரியா, அனில் ஜெயின், பகுகுணா ஜோஷி, ஷாபர் இஸ்லாம் ஆகியோருக்கு வாய்ப்புள்ளது.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜெகநாத் சர்க்கார், சாந்து தாக்கூர், நிதித் பிரமாணிக் ஆகியோர் பட்டியலில் உள்ளனர்.

கர்நாடகாவில் இருந்து பிரதாப் சிம்ஹா, ஹரியாணாவின் பிஜேந்திர சிங், ராஜஸ்தானின் ராகுல் கஷ்வன், ஒடிசாவின் அஸ்வின் வைஷ்ணவ், மகாராஷ்ராவில் பூனம் மகாஜன் அல்லது பிரிதம் முண்டே, டெல்லியில் இருந்து பர்வேஷ் வர்மா அல்லது மீனாட்சி லெஹி ஆகியோரும் அமைச்சர்கள் பட்டியலில் உள்ளனர்.

புதிய அமைச்சர்களில் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படுகிறது. பிஹாரில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் சார்பில் யாருக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. தற்போது ஐக்கிய ஜனதாதளத்துக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக என்று கூறப்படுகிறது.

அக்கட்சியின் மூத்த தலைவர்கள் லாலன் சிங், ராம்நாத் தாக்கூர், சந்தோஷ் குஷ்வா ஆகியோர் பெயர்கள் உள்ளன. உ.பி.யில் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்தின் அனுபிரியா படேலுக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம்.

இதனைத் தவிர பாஜக சார்பில் மூத்த தலைவர்கள் சிலர் அமைச்சர்களாக்கப்படலாம் எனத் தெரிகிறது. மகாராஷ்டிராவில் இருந்து நாராயண் ரானே, பிஹாரில் இருந்து சுஷில் குமார் மோடி, குஜராத் மற்றும் பிஹார் பாஜக பொறுப்பாளரான பூபேந்திர யாதவ் ஆகியோரும் அமைச்சர்களாக கூடும்.

SCROLL FOR NEXT