கேரள மாநிலத்தில் தொடர்ந்து கரோனா பரவல் கவலைக்குரிய நிலையிலேயே தொடர்வதால் மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் அம்மாநில தலைமைச் செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
ஜூலை 6 தேதியிடப்பட்ட மூன்று பக்கங்கள் கொண்ட இந்தக் கடிதத்தில் கேரளாவில் கரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழிவகைகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:
கேரளாவில் ஒட்டுமொத்த அளவில் கரோனா குறைந்துவந்தாலும் கூட கடந்த 4 வாரங்களாக 14 மாவட்டங்களில் இரு மாவட்டங்களில் மட்டும் தொற்று வேகமெடுத்துள்ளது. 14 மாவட்டங்களிலுமே அன்றாடம் சராசரியாக 200 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர்.
கொல்லம், வயநாட்டில் கரோனா தொற்று கடந்த 4 வாரங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
பல மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஆர்டி பிசிஆர் பரிசோதனையை துரிதப்படுத்துங்கள்.
மருத்துவ ஆக்சிஜன், ஐசியு படுக்கை வசதிகள் ஆகியனவற்றை தேவையான அளவு தயார்நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.
வீட்டுத் தனிமையில் இருப்போரை முறையாகக் கண்காணித்து தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டும். தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்துவதை வேகப்படுத்துங்கள். கரோனா தடுப்பு நடவடிக்கையான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகியனவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
இதுவரை மாநில அரசு கரோனா தடுப்புக்கு எடுத்து நடவடிக்கைகளை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.