மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வென்று அசுரபலத்துடன் 3-வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. கடும் போட்டியளித்த பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது.
எனினும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகளில் தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தல் முடிவு குறித்து நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். அதன்படி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கை நீதிபதி கவுசிக் சந்தா விசாரித்து வருகிறார். இந்தநிலையில் ‘‘ அவருக்கு பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால், வழக்கு விசாரணை ஒரு தலைபட்சமாக இருக்கும்’’ எனக்கூறி தலைமை நீதிபதிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து நீதிபதி கவுசிக் சந்தா, மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். நீதித்துறையை தவறாக சித்தரிப்பதற்காக இந்த அபராதம் விதிப்பதாகவும், கரோனாவால் பாதிப்படைந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு இந்த தொகை வழங்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.