மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதுதொடர்பாக அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பாஜக நிர்வாகிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அடுத்த ஆண்டுசட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள உத்தர பிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சில நடவடிக்கைகளை மத்திய பாஜக தலைமை எடுத்து வருகிறது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இதுதொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அதற்கு ஏதுவாக மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பாஜக மேலிடம் விரும்புகிறது. இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகதேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் இதுதொடர்பாக தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பாஜக நிர்வாகிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று காலை மித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பாஜக நிர்வாகிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்தி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர்கள் பலரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதால் எந்தெந்த மாநிலங்களில் இருந்து மத்திய அமைச்சர் தேர்வு செய்யப்படவில்லையோ அந்த மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
மத்திய அமைச்சரவையில் 28 காலி இடங்கள் இருக்கிறது. தற்போது அமைச்சரவையில் பிரதமர் மோடியைத் தவிர்த்து 21 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் உள்ளனர். இதுமட்டுமல்ல சில மத்திய அமைச்சர்கள் மாற்றப்பட்டு அந்த இடங்களுக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.