‘‘ஒடிசா மாநிலத்தில் புரியை தவிர மற்ற இடங்களில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது. அடுத்த முறை கடவுள் அதற்கு அனுமதிப்பார் என்று நம்புகிறோம்’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேற்று உத்தவிட்டனர்.
ஒடிசா மாநிலத்தில் புரி ஜெகன்னாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ரத யாத்திரை வெகு விமரிசையாக நடத்தப்படும். அதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். புரியை போலவே மற்ற நகரங்களிலும் ரத யாத்திரை நடக்கும். ஆனால், கரோனா பரவலால் கடந்த ஆண்டு புரியில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல், ரத யாத்திரை மட்டும் நடத்தப்பட்டது.
தற்போது கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை இன்னும் முடிவுக்கு வராததால், இந்த ஆண்டும் புரியில் மட்டும் ரத யாத்திரை நடத்த ஒடிசா மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வரும் 12-ம் தேதி ரத யாத்திரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஒடிசா மாநில அரசின் முடிவை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து, ஒடிசா அரசு, உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுமக்கள் சிலர் மேல்முறையீடு செய்தனர். மத்திய அரசும் மேல்முறையீடு செய்தது. புரியைப் போலவே ஒடிசாவின் கேந்திரபாரா, பர்கார் மாவட்டங்களிலும் ரத யாத்திரை நடத்த அனுமதி அளிக்கஉத்தரவிட வேண்டும் என்று அவர்கள் மனுக்களில் கோரியிருந்தனர்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது ஒடிசா மாநில அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை நீதிபதிகள் கவனமாக ஆய்வு செய்து அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
தலைமை நீதிபதி ரமணா உத்தரவில் கூறியதாவது:
கரோனாவால், கடும் கட்டுப்பாடுகளுடன் புரியில் மட்டும் ரதயாத்திரை நடத்தும் ஒடிசா அரசின்முடிவில் தலையிட விரும்பவில்லை. அடுத்த முறை அனைத்துஇடங்களிலும் ரத யாத்திரை நடைபெறுவதற்கு கடவுள் அனுமதிப்பார் என்று நம்புவோம்.
நானும் ஆண்டுதோறும் புரிக்கு செல்வேன். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புரிக்கு செல்லவில்லை. வீட்டில் பூஜை செய்கிறேன். வீட்டிலேயே கூட பூஜை செய்யலாம். ஒடிசா மாநில அரசு சரியான முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு தலைமை நீதிபதி ரமணா கூறினார்.