உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் முதல்வராக இருந்த போது, கோமதி நதி வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ரூ.1,437 கோடியில் மேற்கொள்ளப் பட்ட இந்த பணிகளில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறையும், சிபிஐயும் விசாரணை நடத்தி வருகின்றன. இதுதொடர்பாக 189 பேர் மீது சிபிஐ நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
எந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதோ அங்கெல் லாம் சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை போன்ற புலனாய்வு அமைப்புகள் உஷார் படுத்தப்படுகின்றன. அதன்படி, தற்போது உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் அங்கு சிபிஐ சோதனை தொடங்கி இருக்கிறது.
பிரதமர் மோடி தலைமை யிலான மத்திய அரசு, இந்த புலனாய்வு அமைப்புகளை தமது அரசியல் ஆதாயத்திற்காக தவறாக பயன்படுத்தி வருகிறது. ராஜஸ்தான், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்பட்டன.
ஒருகாலத்தில், சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் நம்பகத் தன்மையை பெற்றிருந்தன. தற்போது, மத்திய அரசு சொல்லும் பணிகளை மட்டும் செய்வதால் அந்த அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை நொறுங்கி விட்டது. இது, அந்த அமைப்புகளில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் நன்றாக தெரியும். ஆனால், வேறு வழியில்லாமல் அவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
ஒன்றை மட்டும் நிச்சியமாக சொல்கிறேன். ஒரு காலம் வரும். அப்பொழுது, பாஜகவுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அசோக் கெலாட் கூறியுள்ளார்.