இந்தியா

கர்நாடக துணை முதல்வர் மகனின் கார் மோதி முதியவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டத்தால் ஓட்டுநர் கைது

இரா.வினோத்

கர்நாடக துணை முதல்வர் லட்சுமன் சவதியின் மகன் சிதானந்தின் கார் மோதியதில் 58 வயது முதியவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக துணை முதல்வர் லட்சுமன் சவதியின் மூத்த மகன் சிதானந்த் நேற்று தனது நண்பர்களுடன் விஜயபுராவில் இருந்து அதானிக்கு சென்று கொண்டிருந்தார்.

ஹனுகுண்ட் தேசிய நெடுஞ்சாலையில் கூடலசங்கமா அருகே சென்ற போது இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த 58 வயது கோபால் போலி படுகாயமடைந்து உயிரிழந்தார்.

தகவலறிந்த ஹனுகுண்ட் போலீஸார், சிதானந்தின் காரைபறிமுதல் செய்தனர். உயிரிழந்தவரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து வாகனத்தின் ஓட்டுநர் ஹனுமந்த் சிங்கை கைது செய்தனர்.

உறவினர்கள் புகார்

இதற்கிடையில் இறந்தவரின் உறவினர்கள் கூறும்போது, “வாகனத்தை ஓட்டிய சிதானந்தை கைது செய்யாமல் போலீஸார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சிதானந்திடம் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாமல் அவரை தப்பிக்க வைத்துள்ளனர். அவர் அங்கிருந்து வாகனத்தின் நம்பர் பிளேட்டை சேதப்படுத்தி தப்பி ஓட முயன்ற போது உறவினர்கள் மடக்கி பிடித்தனர். ஆனாலும் போலீஸார் அவரை கைது செய்யவில்லை” என்றனர்.

இதுகுறித்து சிதானந்த் கூறும்போது, “விபத்துள்ளான கார் எனக்கு சொந்தமானது. ஆனால், அதை நான் ஓட்டவில்லை. எனது ஓட்டுநர் ஹனுமந்த் சிங் என்பவர் ஓட்டினார். நான் அந்த காரில் பயணிக்காமல் பின்னால் வந்த மற்றொரு காரிலே நண்பர்களோடு இருந்தேன். விபத்து குறித்து எனக்கு தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்து பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற முயற்சித்தேன். மனிதாபிமானத்தின் அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்துக்கு உதவ தயாராக இருக்கிறேன்” என்றார்.

SCROLL FOR NEXT