ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவத ஏதுவாக தொகுதி மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை மத்திய உள்துறை அமைச்சக குழு இன்று தனது பணியை தொடங்கியது.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது இல்லத்தில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
மத்திய அரசுத் தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற காஷ்மீர் அரசியல் கட்சிகள், மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்தநிலையில் குப்கர் கூட்டணி தலைவர்கள் இன்று ஸ்ரீநகரில் அண்மையில் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர் குப்கர் கூட்டணி வெளியிட்ட அறிக்கையில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நம்பிக்கை தரும் எந்த அம்சமும் இடம்பெறவில்லை அதிருப்தி தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவத ஏதுவாக தொகுதி மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ள குழு இன்று தனது பணியை தொடங்கியது. முதல்கட்டமாக அவர்கள் அனைத்துக் கட்சி தலைவர்களை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.