மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார் அமைச்சரவையில் தங்களுக்கு 4 இடங்கள் வேண்டும் என கெடுபிடி காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் கடந்த 2019ல் மீண்டும் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆட்சியமைந்த சில மாதங்களிலேயே கரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால் இதுவரை அமைச்சரவை விரிவாக்கம் பற்றி எதுவும் பெரிதாக கவனம் செலுத்தப்படாமல் இருந்தது.
கரோனா இரண்டாம் அலை சற்றே ஓய்ந்துவரும் சூழலில், பாஜக அரசியலில் கவனம் செலுத்தத் தொடங்கவிருக்கிறது. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவிருப்பதால் கட்சியை வலுப்படுத்த பாஜக தீவிர வியூகம்வகுத்து செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் தலைமையில் ஆலோசனை நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அமைச்சரவையில் நிதிஷ்குமாரின் ஐக்கியஜனதா தள கட்சிக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தாலும், 4 அமைச்சர்களுக்கு குறையாமல் இடம் வேண்டும் என்று அக்கட்சி கடுமைகாட்டி வருகிறது.
டெல்லி பயணத்தின்போதே ஆலோசிக்கப்பட்டதா?
ஐக்கியஜனதாதள கட்சிக்கு 16 மக்களவை எம்.பி.க்கள் உள்ளனர். இந்நிலையில் மத்தியில் 4 அமைச்சர்கள் வேண்டுமென்பதே அக்கட்சியின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் மத்திய அரசோ ஒரே ஒரு அமைச்சர் பதவியை மட்டுமே இப்போதைக்கு நிதிஷ் கட்சிக்காக ஒதுக்கிவைத்துள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது.
ஆனால், 4 இடங்களை ஏன் கேட்கிறோம் என்பதற்கான தெளிவான காரணங்களையும் ஐக்கியஜனதாதள கட்சி வட்டாரம் முன்வைக்கிறது. பிஹாரில் பாஜகவுக்கு 17 எம்.பி.,க்கள் உள்ளனர். மத்திய அமைச்சரவையில் பிஹாரைச் சேர்ந்த ஐந்து பாஜக எம்.பி.க்கள் உள்ளனர். அந்த பிரதிநித்துவத்தின்படி பார்த்தால்கூட 16 மக்களவை எம்.பி.க்கள் கொண்ட எங்கள் கட்சிக்கு மத்தியில் 4 அமைச்சர்களாவது வேண்டும் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.
முன்னதாக, கடந்த மாதம் கண் அறுவை சிகிச்சையின் நிமித்தம் நிதிஷ்குமார் டெல்லி சென்றார். அப்போதே, அவர் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் உள்ளிட்டோரிடம் தொலைபேசி வாயிலாக தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஐக்கியஜனதாதளத்தின் மூத்த தலைவர்கள் லாலன் சிங், ராம்நாத் தாக்கூர், சந்தோஷ் குஷ்வா ஆகியோர் பெயர்கள் அமைச்சரவை விரிவாக்க உத்தேசப் பட்டியலில் உள்ளன. நிதிஷ்குமார் கோரிக்கை 4 என்றுள்ள நிலையில் அவரது கோரிக்கைக்கு பிரதமர் மோடி செவிசாய்ப்பாரா இல்லை திட்டமிட்டபடி இந்த மூவரில் ஒன்றிரண்டு பேரைமட்டுமே அமைச்சராக்குவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.