மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பாஜக நிர்வாகிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி விரைந்துள்ளனர். இதனால் எந்தநேரமும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால் தனது அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் விரும்புவதாகவும், இந்த மாற்றம் விரைவில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதேபோல, அடுத்த ஆண்டுசட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள உத்தர பிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் சில நடவடிக்கைகளை மத்திய பாஜக தலைமை எடுத்து வருகிறது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இதுதொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அதற்கு ஏதுவாக மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பாஜக மேலிடம் விரும்புவதாக தெரிகிறது. இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.
பிரதமர் மோடி தனது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜகதேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அண்மையில் சந்தித்துப் பேசினார். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரம் குறித்து எதுவும் வெளியாகவில்லை.
கரோனா 2-வது அலை காரணமாக பாஜக தலைவர்களின் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. தற்போது 2-வது அலை குறையத்தொடங்கியுள்ளதால் பாஜகஎம்.பி.க்களை கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவும், அமித் ஷாவும் சந்தித்துப் பேசினர்.
இதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள், தலைவர்களுடன் அமித் ஷா கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தினார். கடந்த 12, 13-ம் தேதிகளில் உ.பி.,மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில எம்.பி.க்களை அமித் ஷா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதேபோல, பிரதமர் மோடியும் கடந்த 5 நாட்களாக பாஜக எம்.பி.க்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். இதன்மூலம் மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுவது உறுதியானது.
இந்தநிலையில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை பாஜக நிர்வாகிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார். பாஜக மூத்த தலைவர்கள் பலரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி விரைந்துள்ளனர். இதனால் எந்தநேரமும் அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதால், எந்தெந்த மாநிலங்களில் இருந்து மத்திய அமைச்சர் தேர்வு செய்யப்படவில்லையோ, அந்த மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அந்த மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.
மத்திய அமைச்சரவையில் 28காலி இடங்கள் இருப்பதாகத் தெரிகிறது. தற்போது அமைச்சரவையில் பிரதமர் மோடியைத் தவிர்த்து 21 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் (தனிப் பொறுப்பு), 23 இணை அமைச்சர்களும் உள்ளனர்.