‘பொது இடங்களில் ஆபாச படம், வீடியோ பார்ப்பதை தனி மனித சுதந்திரமாகவோ, பேச்சு சுதந்திரத்தின் ஒரு பகுதியாகவோ கருத முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் ஆபாச படம், வீடியோக்கள் பார்ப்பதால் குழந்தைகள் பாதிக்கப்படு கின்றனர். எனவே, இந்தியாவில் ஆபாச இணைய தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி, உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, குழந்தைகள் ஆபாச படங்கள் பார்ப்பது அதிகரித்துள்ளது என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த பின், மத்திய அரசு சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 857 ஆபாச இணைய தளங்கள் தடை செய்யப் பட்டன. பின்னர், இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இணைய தளங்களை முடக்கி வெளியிடப் பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் சிவகீர்த்தி சிங் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், “ஆபாச இணைய தளங்களை தடை செய்வதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. இது தனி மனித சுதந்திரம் என்று வாதிடப்படுகிறது. மேலும், சர்வதேச உதவியின்றி தடையை அமல்படுத்த முடியாது” என்று வாதிட்டார். உச்சநீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகாலட்சுமி பவானி, “பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பஸ் ஓட்டுநர் குழந்தைகள் முன்னிலையில் ஆபாச படம் பார்க்கிறார். அந்தப் படத்தை பார்க்கும்படி குழந்தைகளை கட்டாயப்படுத்துகிறார். இதை அனுமதிப்பது சமூகத்துக்கு எதிரான அநீதி” என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், “தனி மனித சுதந்திரம், பேச்சுரிமை ஆகியவை முழுமையான சுதந்திரம் அல்ல. தனி மனித சுதந்திரம் எங்கே முடிகிறது, குற்றச் செயல் எங்கே தொடங்குகிறது என்று எல்லைக் கோடு வகுக்க வேண்டியது அவசியம். எனவே, ஆபாச படங்களை பொது இடங்களில் பார்ப்பதை தடுப்பது குறித்த ஒரு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.