வர்த்தக ரீதியிலான குறுந்தகவல் விளம் பரங்களில் போலியான தகவல்களை அனுப்புவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தொலைத் தொடர்புத் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. தவறு செய்வோரின் தொலைத் தொடர்பு இணைப்பை நிரந்தரமாகத் துண்டிக்கவும் விதிமுறைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலியான குறுந்தகவல் அல்லது தகவல் அனுப்புவோரைப் பற்றிய விவரம் இல்லாமல் விளம்பரங்களை அனுப்புவோர் மீது ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். விதிமீறலின் அளவைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும். எந்த செல்போன்எண்ணிலிருந்து தகவல் அனுப்பப்படுகிறதோ அந்த இணைப்பை நிரந்தரமாக துண்டிக்கவும் விதிமுறை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தகவல் தொகுப்பு புலனாய்வு பிரிவு (டிஐயு) ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. போலியான பெயரில் தகவல் அனுப்புபவர்களை இக்குழு கண்காணிக்கும். இக்குழுவுடன் டெலிகாம் அனாலிடிக்ஸ் என்ற குழுவும் இணைந்து செயல்படும். இக்குழுவானது பயனர்களை போலியான தகவல் மூலம் ஏமாற்றுவோரிடமிருந்து பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டதாகும்.
இவ்விரு குழுக்களும் அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து, தொலைத் தொடர்பு சேவையை தவறாக பயன்படுத்துவோரைக் கண்டறியும். அதேபோல பொதுமக்கள் அனுப்பும் புகாரின் அடிப்படையிலும் கண்காணிப்பு செய்யும்.
மேலும் போலியான சிம் கார்டு உபயோகம், போலியான அடையாள அட்டைமூலம் பெறப்பட்ட சிம் கார்டு, மொபைல் எண் மாற்றுதலில் நிகழும் மோசடி உள்ளிட்டவற்றையும் இது கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ளும். பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதுதான் இக்குழுவின் பிரதான நோக்கமாகும். - பிடிஐ