இந்தியா

கணக்கில் வராத சொத்து ரூ.20,000 கோடி: ஆர்டிஐ கேள்விக்கு மத்திய அரசு பதில்

செய்திப்பிரிவு

புலிட்சர் விருது பெற்ற பனாமா ஆவணங்கள் மூலம் இதுவரை ரூ.20,078 கோடி மதிப்பிலான கணக்கில் வராத சொத்துகளை சக்தி வாய்ந்த நபர்கள் பதுக்கி இருப்பது அடையாளம் காணப் பட்டுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தாக்கல் செய்த கேள்விக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) பதில் அளித்துள்ளது. அதில், பனாமா பேப்பர் மூலம் 2021 ஜூன் வரையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ரூ.20,078 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டாத சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படும் சொத்துகள் குறித்ததகவல் தொகுப்புதான் பனாமா ஆவணங்கள் ஆகும். பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட ஆலோசனை நிறுவனமான மொசாக் ஃபோன்செகா சுமார் 11.5 மில்லியன் ரகசிய ஆவணங்களை பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. இதில் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ஐசிஐஜே) மற்றும் 100-க்கும் மேலான ஊடக நிறுவனங்களின் பங்களிப்பும் உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் அவற்றில் ஒன்று. பனாமா பேப்பர் குறித்த செய்திகளை இந்தியாவில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 2016-ல் வெளியிட்டது.

இந்நிலையில், தற்போது ஆர்டிஐ மூலமாக பெறப்பட்டுள்ள தரவுகள் இதற்கு முன் அடையாளம் காணப்பட்ட சொத்து மதிப்புகளைக் காட்டிலும் அதிக மதிப்புகொண்டதாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2018 ஏப்ரல் மாதத்தில் ரூ.1,088 கோடி மதிப்பிலான சொத்துகள் அடையாளம் காணப்பட்டன. இது 2019 ஜூன் மாதத்தில் ரூ.1,564 கோடியாக அதிகரித்தது. தற்போது ரூ.20,078 கோடி அளவுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் ஆர்டிஐ தகவலில், இந்த கண்டுபிடிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் சிபிடிடி பட்டியலிட்டுள்ளது. அதில் கருப்பு பண சட்டம் மற்றும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 83 வழக்குகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் விசாரணை முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களிடமிருந்து இதுவரை ரூ.142 கோடி மதிப்பிலான வரி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பனாமா ஆவணங்கள் மூலமாகஉலகில் உள்ள வரி அதிகாரிகள் வரி ஏய்ப்பு செய்தவர்களிடமிருந்து 1.36 பில்லியன் டாலர்களுக்கும் மேல் வரி மற்றும் அபராதமாகப் பெற்றுள்ளனர் என்று ஐசிஐஜே கணக்கீடு தெரிவிக்கிறது. இத்தகைய வரி வசூலில் இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

SCROLL FOR NEXT