இந்தி நடிகர் அனுபம் கேருக்கு விசா வழங்க பாகிஸ்தான் மறுத்துள்ளது.
கராச்சியில் நடைபெறவுள்ள இலக்கியத் திருவிழாவில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் விசாவுக்கு விண்ணப்பிருந்ததாகவும், ஆனால் தனது விசாவை பாகிஸ்தான் நிராகத்துவிட்டதாகவும் அனுபம் கேர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
மேலும், "எனக்கு விசா மறுக்கப்பட்டது உண்மையே. ஆனால் அதற்கு காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை, காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஆதரவாக நான் பேசுவதால் இருக்கலாம். இல்லையேல் பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பதாலும்கூட இருக்கலாம்" என அவர் அத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார்.
அவருக்கு அண்மையில் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் மறுப்பு:
ஆனால், இத்தகவலை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பாகிஸ்தான் துணை தூதரக அதிகாரி மன்சூர் அலி மேமன் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "அனுபம் கேர் விசாவுக்கு முறைப்படி விண்ணப்பிக்கவில்லை. அவரிடம் விசா விண்ணப்பித்ததற்கான அடையாளச் சீட்டு ஏதும் இருக்கிறதா என சோதிக்கவும்" எனக் கூறியுள்ளார்.
கராச்சி இலக்கியத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.