இந்தியா

திறப்பு விழாவில் கத்தரிக்கோல் கொண்டுவர தாமதம்: பொறுமையிழந்த தெலங்கானா முதல்வர்

ஏஎன்ஐ

ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் திறப்பு விழாவில் கத்தரிக்கோலைக் கொண்டுவர தாமதமானதால் பொறுமையிழந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ரிப்பனை கையால் கிழித்துவிட்டு திறப்புவிழாவை நடத்தினார்.

தெலங்கானாவில் ராஜணா சிர்சிலா மாவட்டத்தின் மண்டேபள்ளி கிராமத்தில் சமுதாயக் குடியிருப்புகள் திறப்புவிழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு முதல்வர் கே.சந்திரசேகரராவ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர், ரிப்பன் வெட்டுவதற்காக கத்திரிக்கோலை கேட்கிறார்.

ஆனால், சுற்றியிருந்த அனைவருமே கத்திரிக்கோலைத் தேட சிறிது நேரத்தில் பொறுமையிழந்த சந்திரசேகர ராவ் ரிப்பன் ஒட்டப்பட்டிருந்த செலோஃபேன் டேப்பை கழற்றிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

முதல்வர் இப்படி பொறுமை இழக்கலாமா என சமூக வலைதளங்களில் சிலர் கருத்து பகிர, உள்ளூர் எம்.எல்.ஏ.வும், முதல்வரின் மகனுமான கே.டி.ராமா ராவ் ட்விட்டரில் இன்னொரு வீடியோவைப் பகிர்ந்தார். அதில், வீடு திறப்புவிழாவுக்கு முன்னதாக நீண்ட நேரம் பொறுமையாக அத்தனை பூஜைகளையும், சடங்குகளையும் முதல்வர் செய்வது இடம்பெற்றிருந்தது.

தெலங்கானாவில் ரூ.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்புக்கு கேசிஆர் நகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இங்கு ஏழை, எளிய மக்களுக்காக 1300 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 5000 பேர் இந்த குடியிருப்புகளில் வசிக்கலாம். தெலங்கானா அரசின் பிரதான திட்டங்களில் ஒன்றாக இரட்டை படுக்கையறை கொண்ட வீடு வழங்கும் திட்டம் பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT