யோகா குரு பாபா ராம் தேவ் | கோப்புப்படம் 
இந்தியா

அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவின் சர்ச்சைப் பேச்சு: உச்ச நீதிமன்றம் இன்று ஆய்வு

பிடிஐ


கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் அலோபதி மருத்துவம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை யோகா குரு பாபா ராம்தேவ் கூறியது தொடர்பாக பலவழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், உண்மையில் ராம்தேவ் என்ன பேசினார் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று ஆய்வு செய்ய உள்ளது.

பாபா ராம்தேவ் தன்மீது பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும், விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தங்களையும் ஒரு மனுதாரராகச் சேர்க்கக் கோரி டெல்லியில் உள்ள இந்திய மருத்துவக் கூட்டமைப்பும் மனுத்தாக்கல் செய்துள்ளது.

ராம் தேவ் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோகத்கி கடந்த வாரம் ஆஜராகினார். அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, “ உண்மையில் பாபா ராம்தேவ் என்ன பேசினார், நீங்கள் எதையும் முழுமையாக எங்களிடம் தெரிவிக்கவில்லையே. அவர் பேசிய முழு விவரத்தையும் எங்களிடம் தாக்கல் செய்யுங்கள்” எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏஎஸ் போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு முன் இன்று இந்த மனு விசாரிக்கப்பட உள்ளது.அப்போது அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் உண்மையில் என்ன விதமான கருத்துக்களைப் பேசினார் என்பது குறித்து நீதிபதிகள் அமர்வு ஆய்வு செய்ய உள்ளனர்.

கரோனா சிகிச்சைக்கு பயன்படும் அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இந்திய மருத்துவ கூட்டமைப்பு அவர் மீது கிரிமினல் புகார் அளித்தது. இதைத்தொடர்ந்து பாட்னா, ராய்பூரில் பாபா ராம்தேவ் மீது பல முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. பாபா ராம்தேவ் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் வழக்கு, ஐபிசி பிரிவு 188, பிரிவு 269, பிரிவு 504 ஆகியவற்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், பாபா ராம்தேவ் கருத்துக்கு தேசிய அளவில் இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து, போராட்டங்களை நடத்தியது. இந்த சூழலில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை டெல்லி மாற்ற வேண்டும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி பாபா ராம்தேவ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT