பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஜேஎன்யு, வெமுலா சர்ச்சைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் ஆலோசிக்க அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கியது. இது இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட், குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் என எது குறித்து வேண்டுமானாலும் அவையில் பேச அரசு தயாராக இருக்கிறது.
மேலும், ஜேஎன்யூ சர்ச்சை, ஹைதராபாத் பல்கலைக்கழக சர்ச்சை, இடஒதுக்கீடு விவகாரம் குறித்து அவையில் ஆலோசிக்கவும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தை மூடும் திட்டம் அரசுக்கு இல்லை. ஆனால், அரசு அவ்வாறாக முடிவு செய்திருப்பதாக தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது" என்றார்.