இந்தியா

ஹரியாணாவில் ஜாட் இன மக்கள் மீண்டும் போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

பிடிஐ

ஹரியாணா மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி ஜாட் இன மக்கள் நேற்று மீண்டும் வன்முறை யில் ஈடுபட்டனர். ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் பலியாயினர். இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தங்களை இதர பிற்படுத்தப் பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஜாட் சமுதாயத்தினர் கடந்த ஒரு வாரமாக சாலை மறியல், ரயில் மறியல் உள் ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட னர். இதில் 13 பேர் பலியாயினர்.

இந்நிலையில், ஜாட் சமுதாயப் பிரதிநிதிகள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் அனில் ஜெயின், “ஜாட் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்ட மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படும். இதுகுறித்து ஆராய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து, ஒரு வாரத்துக் குப் பிறகு நேற்று போராட்டம் சற்று ஓய்ந்து காணப்பட்டது. ரயில் பாதைகள், சாலைகளை மறித்து வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. வன் முறை காரணமாக சில நகரங்களில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது.

அம்பாலா-பிப்லி சாலையில் பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கைதால் உள்ளிட்ட சில நகரங்களில் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. எனினும் ரோத்தக், ஹிசார், பிவானி உள் ளிட்ட சில மாவட்டங்களில் நேற்றும் தொடர்ந்து போராட்டம் நடந்தது. குறிப்பாக டெல்லி-அம்பாலா நெடுஞ்சாலை உள்ளிட்ட சில சாலைகளில் போராட்டம் நடந்தது.

ஹிசார் நகரிலிருந்து முக்கிய நகரங்களுக்கு புறப்படும் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட் டுள்ளன. ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த 5 கிராமங்களில் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இட ஒதுக்கீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சோனிபட் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கலவரம் வெடித்தது. சோனிபட் அருகே காட்சோலி பகுதியில் ஜாட் சமுதாயத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸா ரும் துணை ராணுவப் படை வீரர் களும் அப்புறப்படுத்த முயன்றனர்.

அப்போது ஆர்ப்பாட்டக்காரர் கள் கற்களை வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட் டது. இதில் 3 பேர் பலியாகினர். ஒட்டுமொத்தமாக இதுவரை 16 பேர் பலியாகி இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டெல்லிக்கு தண்ணீர் விநியோகம்

ஹரியாணா மாநிலம் முனக் கால்வாய் மூலம் டெல்லிக்கு தண் ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. இந்நிலையில் ஜாட் சமுதாயத்தின ரின் போராட்டம் காரணமாக டெல்லிக்கான தண்ணீர் விநி யோகம் பாதிக்கப்பட்டது. இப் போது போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், தண்ணீர் விநியோகம் சீரடைந்து வருகிறது.

இதுகுறித்து மத்திய பாதுகாப் புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறும்போது, “முனக் கால் வாய் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால் டெல்லிக்கான தண்ணீர் விநியோகம் படிப்படியாக சீராகும்” என்றார்.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்திலும் ஜாட் சமுதாயத் தினரின் இட ஒதுக்கீடு கோரி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அரசு பஸ்ஸுக்கு தீ வைத்தனர்.

இதையடுத்து அந்த மாவட்டத் தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டு வதற்காக, தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளதாக காவல் துறை ஐஜி அலோக் வஷிஷ்டா தெரி வித்தார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க 2 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதாகவும் அதுவரை அமைதி காக்குமாறும் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே வேண்டு கோள் விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT