உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டி அளித்த காட்சி | படம் ஏஎன்ஐ 
இந்தியா

சட்டப்பேரவைத் தேர்தலில் 300 இடங்களுக்கும் மேல் கைப்பற்றுவோம்: ஆதித்யநாத் நம்பிக்கை

ஏஎன்ஐ


உத்தரப்பிரதேசத்தில் 2022-ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனா கட்சி 300 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த 75 மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 67 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த வெற்றிக்குப்பின் முதல்வர் ஆதித்யநாத் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாநிலத்தில் நடந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பாஜக 75 இடங்களில் 67 இடங்களில் வென்றுள்ளது. பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 2022ம் ஆண்டில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கும் அதிகமாகக் கைப்பற்றும்.

பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோரின் வழிகாட்டலில் இந்த வெற்றி கிடைத்துள்ளது, திட்டமிட்டு செயல்பட்டு இந்த வெற்றியை பாஜக பெற்றுள்ளது.

2014 பொதுத்ேதர்தல், 2017 சட்டப்பேரவைத் தேர்தல், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றுள்ளது, 2022ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக வெல்லும். இந்த சாதனை வெற்றியை அளித்த மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறேன், கரோனா பாதிப்புக்கு மத்தியில் இந்த தேர்தல் நடத்தப்பட்டு, வெற்றி கிடைத்துள்ளது.

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி மிகப்பெரிய தலைவர். 2022ம் ஆண்டு சட்டப்பேரவைத் ேதர்தலில் அவரின் கட்சி போட்டியிடுவதாக இருந்தால், சவால் விட்டால் அதை ஏற்க பாஜகவும் தயாராக இருக்கிறது. 2022ம் ஆண்டிலும் பாஜகதான் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை”

இவ்வாறு ஆதித்யநாத் தெரிவி்த்தார்.

மாவட்டப் பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ உத்தரப்பிரதேச மாவட்ட பஞ்சாயத்து தேர்தலி்ல் பாஜக சிறந்த வெற்றியை மக்களின் ஆசியுடன் பெற்றுள்ளது. வளர்ச்சி, பொதுச்சேவை, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றால் மக்கள் ஆசியுடன் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

முதல்வர் ஆதித்யநாத் வகுத்த கொள்கைகளால்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது, தொண்டர்களின் கடினமான உழைப்பும் காரணமாகும். உபி அரசுக்கும், பாஜகவுக்கும் எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT