நடப்பாண்டில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் ஆகிய வற்றிலிருந்து ரயில்வேக்கு கிடைக் கக்கூடிய வருவாய் நிர்ணயிக்கப் பட்ட பட்ஜெட் இலக்கை விட 15,744 கோடி ரூபாய் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2015-16-ம் ஆண்டில் 1.83 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட திட்டமிட்டிருந்தது. தற்போது திருத்தப்பட்ட மதிப்பீட்டின் படி 1.67 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடியும் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, வருமானம் குறைந்துள்ளதற்கு பொருளாதார சூழ்நிலை சர்வதேச அளவில் மந்தமாக இருந்ததே காரணம் என்று கூறியுள்ளார்.
வரலாற்று ரீதியாக இந்திய ரயில்வேயின் பங்கு 1980ம் ஆண்டில் 62 சதவீதம் இருந்தது. 2012-ம் ஆண்டில் 36 சதவீதமாக குறைந்து இந்த துறைக்கு தொடர்ந்து நெருக்குதலைக் கொடுத்து வருகிறது என்று ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது கூறினார். அடுத்த ஆண்டில் திட்டமிட்ட வருவாயை அடைவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2016-17 நிதியாண்டில் ரூ.1,84,820 கோடி வருவாய் ஈட்ட ரயில்வே திட்டமிட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10 % அதிகமாகும்.
2015-16-ம் ஆண்டின் ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணத்தின் மூலம் வரும் வருவாய் 50,175 கோடி ரூபாய் என திட்டமிடப்பட்டதை விட 4,798 கோடி ரூபாய் குறைந்து 45,376 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் சரக்கு கட்டணம் மூலம் வரும் வருவாய் 1.21 லட்சம் கோடி ரூபாய் திட்டமிடப்பட்டதில் 9,750 கோடி ரூபாய் குறைந்து 1.11 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.