கரோனா காலக்கட்டம் திரையுலகை வெகுவாக பாதித்துள்ளது. இரண்டாம் அலையின் தொடக்கத்
திலேயே மூடப்பட்ட திரையரங்குகள் இதுவரை திறக்கப்படாததால் ஏற்கெனவே வெளியீட்டுக்குக் காத்திருந்த படங்களும் தள்ளிபோகிறது. ஓடிடி தளங்கள் இருந்தாலும் அதில் பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்களுக்கே வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் சிறு பட்ஜெட் படங்களைக் காக்கும்வகையில் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை கேரள அரசு தொடங்கியுள்ளது.
சிறுபட்ஜெட் படங்களை வெளியிடுவதற்கு என்றே ஒரு பிரத்யேக ஓடிடி தளத்தை தொடங்கும் பணியில் கேரள அரசு கவனம் செலுத்திவருகிறது. இதுகுறித்து கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் இந்து தமிழ் திசையிடம் கூறும்போது, “கரோனாவுக்குப் பின் மலையாளத் திரையுலகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதற்கு தீர்வுகாண அரசு பலகட்ட யோசனைகளைச் செய்தது. இப்போது நாங்கள் கொண்டுவர இருக்கும் ஓடிடி தளம் சிறிய பட்ஜெட் படங்களைக் காக்க வேண்டும் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதற்கென்று புதிய ஓடிடி தளத்தை தொடங்குவதா அல்லது ஏற்கெனவே இருக்கும் ஒரு தளத்தை வாடகைக்கு எடுப்பதா என்பது குறித்து யோசித்துவருகிறோம்” என்றார்.
கரோனா பெருந்தொற்றால் மலையாளத் திரையுலகில் ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே எடுத்து முடிக்கப்பட்ட பல படங்கள் கரோனாவால் வெளியிட முடியாமல் சிக்கிக்கொண்டன. இந்நிலையில்தான் மலையாள திரையுலகினரின் பார்வை ஓடிடி தளங்களின் மீது பதிந்தது. மலையாள திரையுலகின் முக்கிய நட்சத்திரமான மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 2’ ஓடிடியில் வெளியானதும் வரிசையாக பெரிய பட்ஜெட் படங்களும் ஓடிடி தளத்துக்கு வரத் தொடங்கின. ‘த்ரிஷ்யம் 2’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் திரையரங்கில் ரிலீஸ் ஆகாததால் வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் அதிருப்தி அடைந்தனர். அதனாலேயே மோகன்லாலின் மரக்கர் திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டபோதும் ரிலீஸை எதிர்பார்த்து ஓராண்டாக காத்துள்ளது.
மலையாளத்தில் சமீபத்தில் பிரித்விராஜ் நடித்த கோல்ட் கேஸ் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. பகத் பாசிலின் மாலிக் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களும் அடுத்தடுத்து ஓடிடி தளத்திலேயே ரிலீஸாக உள்ளன. அதேநேரம் கேரள திரைப்பட வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் பெரிய பட்ஜெட் படங்கள் திரையரங்க வெளியீட்டுக்குப் பின்பு, ஓடிடி தளத்திலும், சிறுபட்ஜெட் படங்கள் நேரடியாக ஓடிடி தளத்திலும் வெளியிட்டால் மட்டுமே மலையாளத் திரையுலகம் காக்கப்படும் என கூறிவருகின்றனர். இந்நிலையில் சிறுபட்ஜெட் படங்களைக் காக்கும்வகையில் கேரள அரசு எடுத்துவரும் பிரத்யேக ஓடிடி தள முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கெனவே கேரள அரசு, திரையரங்குகளையும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.