காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே 3 நாட்களாக நீடித்த என்கவுன்ட்டர் முடிவுக்கு வந்தது. தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர் அருகே பாம்பூர் பகுதியில் கடந்த 20-ம் தேதி சென்று கொண்டிருந்த சி.ஆர்.பி.எப். வாகனம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அருகில் உள்ள தொழில் மேம்பாட்டு மையத்துக்குள் புகுந்து பதுங்கி கொண்டனர். அங்கு 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். முதல்நாளிலேயே அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப். வீரர்கள், மாநில போலீஸார் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். 2-வது நாள் தாக்குதலில் 2 ராணுவ கேப்டன், ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த என்கவுன்ட்டர் திங்களன்று 3-வது நாளாக நீடித்தது. கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ராணுவ வீரர்கள், தீவிரவாதிகளை ஒரு சிறிய பகுதிக்குள் முடங்கச் செய்தனர். இந்நிலையில் நேற்று மாலை 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்த கட்டிடத்திலோ, சுற்றுவட்டார பகுதியிலோ வேறு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என்பதை கண்டறிய ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பாம்பூர் என்கவுன்ட்டரில் உயிரிழந்த ராணுவ கேப்டன் துஷார் மகாஜனின் இறுதிச் சடங்கு ஜம்முவின் உதம்பூரில் நேற்று நடைபெற்றது. இதே என்கவுன்ட்டரில் பலியான மற்றொரு ராணுவ கேப்டன் பவன் குமாரின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான ஹரியாணா மாநிலம், ஹிண்ட் அருகேயுள்ள பாத்னா கிராமத்தில் நடைபெற்றது.