ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி நிர்வாகத் துக்கு ஆலோசனைகளைக் கூற ஓய்வு பெற்ற 2 ஐ.ஏ.எஸ். அதிகாரி களை ஆளுநர் என்.என்.வோரா நியமித்துள்ளார்.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அந்த மாநில முதல்வர் முப்தி முகமது சையது உடல்நலக் குறைவால் கடந்த ஜனவரி 7-ம் தேதி உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து முப்தியின் மகள் மெகபூபா தலைமையில் பிடிபி-பாஜக கூட்டணி அரசு பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆயுதப்படை சட்டத்தை படிப்படியாக வாபஸ் பெற வேண்டும் என்று மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவிடம் மெகபூபா வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரத்தால் புதிய அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது.
கடந்த 2-ம் தேதி மெகபூபாவையும் பாஜக மாநிலத் தலைவர் சத் பால் சர்மாவையும் ஆளுநர் வோரா அழைத் துப் பேசினார். ஆனால் இரு தலைவர் களும் தங்களின் நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் ஆட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனைகளைக் கூற ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேவன், கனாய் ஆகியோரை ஆளுநர் என்.என்.வோரா நேற்று நியமனம் செய்தார். இரு வரும் காஷ்மீர் அரசின் பல்வேறு துறை களில் பணியாற்றியவர்கள் ஆவர்.
இதுகுறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாடு கட்சித் தலைவருமான ஒமர் அப்துல்லா ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
பிடிபி-பாஜக கூட்டணி மீண்டும் பதவியேற்க முன்வரவில்லை. இந் நிலையில் புதிதாக 2 ஆலோசகர்களை ஆளுநர் நியமனம் செய்துள்ளார். ஆட்சி யமைக்க யாரும் உரிமை கோராத நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதுதான் ஜனநாயக நடை முறை.
ஆனால் ஆளுநரின் நடவடிக்கை இப்போதைக்கு ஆளுநர் ஆட்சி முடி வுக்கு வராது என்பதை உணர்த்து கிறது, இந்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறுமா என்பதும் சந்தேகம்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.