முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் 
இந்தியா

உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராஜினாமா ஏன்?- பாஜக விளக்கம்

செய்திப்பிரிவு

கரோனா காலத்தில் தற்போது தேர்தல் நடத்த முடியாத சூழல் உள்ளது, அரசியல் சட்ட நெருக்கடி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தீரத் சிங் பதவியில் இருந்து விலகியுள்ளதாக முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் திரேந்திர சிங் ராவத் கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டு புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். தீரத் சிங் ராவத் தற்போது பவுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் அவர் 6 மாதங் களுக்குள் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அவர் பதவியேற்க வேண்டும். தற்போது கங்கோத்ரி தொகுதியும், ஹால்த் வானி தொகுதியும் காலியாக உள்ளன. இவற்றில் கங்கோத்ரி தொகுதியில் தீரத் சிங் ராவத்தை நிறுத்த கட்சி முடிவு செய்திருந்தது.

இந்தநிலையில் தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக இன்று மாலை 3 மணியளவில் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சிறப்பு பார்வையாளராக பாஜக தலைமை அறிவித்துள்ளது. இந்தக்கூட்டத்தில் சட்டப்பேரவை பாஜக புதிய தலைவா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இந்தநிலையில் தீரத் சிங் ராஜினாமா குறித்து முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது:

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவில் எந்த மோதலும் இல்லை. கரோனா காலத்தில் தற்போது தேர்தல் நடத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் தீரத் சிங் ராவத் தேர்தலை சந்திக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் அரசியல் சட்ட நெருக்கடி ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே அவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT