ஜம்மு காஷ்மீரில் போலீஸ் காவலர் ஒருவர், 72 வயது முதியவரை மலைப்பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாக முதுகில் சுமந்து சென்று தடுப்பூசி செலுத்தச் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கிராமப் புறங்களில், கிராம பாதுகாப்பு கமிட்டி (விடிசி) உறுப்பினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறப்பு போலீஸ் அலுவலர் (எஸ்பிஓ) என்றும் அழைக்கப்படும் இவர்கள் பெரும்பாலும் அதே கிராமத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இவர்கள் தற்போது, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் மக்களின் அச்சத்தை போக்குவதிலும் அவர்களை தடுப்பூசி முகாமுக்கு அழைத்து வருவதிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ரியாசி மாவட்டத்தில் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமம் ஒன்றில் எஸ்பிஓ-வாக பணியாற்றி வரும் மோகன் சிங் என்ற காவலர், அருகில் உள்ள கரோனா தடுப்பூசி மையத்துக்கு பஷீர் அகமது என்ற 72 வயது முதியவரை 1 மணி நேரத்துக்கும் மேலாக முதுகில் சுமந்து சென்றார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மோகன் சிங்குக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, “ரியாசி மாவட்டத்தில் தொலைதூர மற்றும் மலைப்புற கிராமங்களில் 5,700-க்கும் மேற்பட்ட எஸ்பிஓ-க்கள் பணியாற்றி வருகின்றனர். கரோனா தடுப்பூசி பணியில் இவர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். கிராமங்களில் இரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இவர்கள், பகலில் தடுப்பூசி பணிகளுக்கு உதவுகின்றனர். இதுதவிர, காவல்நிலைய போலீஸாரில் 70 சதவீதம் பேர் தடுப்பூசி பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.