இந்தியா

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை காரணமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

செய்திப்பிரிவு

தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகாரணமாக மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

மேலும், இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மார்ச்,ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக நடைபெற்றது. இதில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தது. அதே சமயத்தில், 77 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

இந்தச் சூழலில், அங்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக செய்திகள் வெளியாகின. பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதாகவும் கூறப்பட்டது. இது,நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த விஷயத்தில் தலையிட்ட கொல்கத்தா உயர் நீதிமன்றம், இதுகுறித்து விசாரிக்க மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்த ஒரே காரணத்துக்காக நூற்றுக்கணக்கானோர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். பலரது வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பறிபோய் உள்ளது. பலர் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அண்டை மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். வன்முறைச் சம்பவத்தை அடக்காமல் மாநில அரசு வேடிக்கைப் பார்க்கிறது. அங்கு சட்டம் - ஒழுங்கு இல்லாமல் போய்விட்டதாகவே கருத முடிகிறது.

ஒரு மாநிலத்தில் சட்டம் - ஒழுங்குசீர்குலைந்தால், ஆளுநரின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு,அரசமைப்புச் சட்டத்தின் 356-வதுபிரிவின்படி, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும். எனவே, மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வருவதற்காக அங்கு மத்திய பாதுகாப்புப் படைகளை அனுப்பவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு வினீத் சரண் மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மேலும் இதேகோரிக்கைக்காக தாக்கலானமேலும் 2 மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். இதுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசு, மேற்கு வங்க அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT