இந்தியா

லட்சத்தீவு நடிகை மீதான தேச துரோக வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

லட்சத்தீவைச் சேர்ந்தவர் ஆயிஷா சுல்தானா. மாடலான இவர் சில படங்களில் நடித்துள்ளார். மேலும் படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் மலையாள டிவி சேனல் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிஷா சுல்தானா, “லட்சத்தீவில் கரோனா வைரஸ் தொற்றை பரப்ப மத்திய அரசு உயிரி ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளது” என குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக கவரெட்டி காவல் நிலையத்தில் பாஜகவின் லட்சத்தீவு பிரிவு தலைவர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது கடந்த ஜூன் 9-ம் தேதி தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஆயிஷாவிடம் போலீஸார் கடந்த வாரம் 3 முறை விசாரித்தனர். இதனிடையே இந்த வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஆயிஷா மனு தாக்கல் செய்தார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆயிஷாவின் மனுவுக்கு லட்சத்தீவு நிர்வாகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “வழக்கு தொடக்க நிலையில் இருப்பதால் விசாரணையை முடிக்க கால அவகாசம் வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து ஆயிஷா சுல்தானா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. விசாரணை விவரங்களை அளிக்குமாறு லட்சத்தீவு நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT